Googleளில் உங்கள் பிசினஸைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்

நிலையான ஓர் இடத்தில் வைத்து வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கும் பிசினஸாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் இடத்திற்குச் சென்று சேவை வழங்கும் பிசினஸாக இருந்தாலும் Googleளில் உங்கள் Business Profileலை உருவாக்கலாம். இடைநீக்கம் செய்யப்படாதவாறு ஒரு Business Profileலை உருவாக்க, நீங்கள் செய்ய வேண்டியவை:

அடிப்படை வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ளுதல்

Googleளில் பிசினஸ் தகவல்களை மிகச் சரியாகவும் துல்லியமாகவும் வைத்திருக்க, உள்ளூர் பிசினஸ்களுக்கான இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். உங்கள் தகவல்களில் மாற்றங்கள் செய்யப்படுவது, சில சூழ்நிலைகளில் Googleளில் இருந்து உங்கள் பிசினஸ் தகவல்கள் அகற்றப்படுவது உள்ளிட்ட பொதுவான சிக்கல்களைத் தவிர்க்க இந்த வழிகாட்டுதல்கள் உதவும்.

உங்கள் Business Profileலை நிர்வகிப்பது தொடர்பான சிறந்த முடிவுகளுக்கு:

  • உங்கள் பிசினஸ் நிஜ உலகில் பெயர்ப் பலகைகள், ஸ்டேஷனரி பொருட்கள், பிராண்டிங் செய்யும் பிற வழிகள் ஆகியவற்றில் எப்படிக் காட்டப்படுகிறதோ, எப்படி அடையாளம் காணப்படுகிறதோ அதே போலவே Business Profileலிலும் காட்சிப்படுத்துங்கள்.
  • உங்கள் முகவரி மற்றும்/அல்லது சேவைப் பகுதி துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
  • உங்கள் ஒட்டுமொத்த பிசினஸின் முக்கியச் செயல்பாட்டை விவரிக்கக்கூடிய மிகச் சில வகைகளைத் தேர்வுசெய்யவும்.
  • ஒரு பிசினஸுக்கு ஒரு சுயவிவரம் மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட சுயவிவரங்கள் இருந்தால் Google Maps, Search ஆகியவற்றில் உங்கள் பிசினஸ் குறித்த தகவல்கள் காட்டப்படும் விதத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதே இதற்குக் காரணம்.

உதவிக்குறிப்புகள்:

  • உங்கள் பிசினஸ் சுயவிவரத்தில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுவதற்கான நேரடி வழிகாட்டுதல்களையும் பிரத்தியேகப் பரிந்துரைகளையும் பெற, சிறு வணிக ஆலோசனைக்கு அப்பாயிண்ட்மெண்ட் பெறுங்கள்.
  • இந்தச் சேவை தற்சமயம் அமெரிக்காவில் உள்ள வணிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

Business Profileகளுக்கான உள்ளடக்க வழிகாட்டுதல்கள் குறித்து அறிக

வெளியிடும் உள்ளடக்கத்தில் உங்கள் பிசினஸைத் தனித்துவமாக்கும் விஷயங்கள் ஹைலைட் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு, Google Business Profile கொள்கைகள் குறித்த அறிமுகம் பக்கத்தைப் பார்க்கவும்.

எங்களின் தடைசெய்யப்பட்ட மற்றும் வரம்பிடப்பட்ட உள்ளடக்கக் கொள்கைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி தனிப்பட்ட நிதித் தகவல், அரசாங்கம் வழங்கிய அடையாள ஆவணங்கள், பெயருடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்புடைய தொடர்புத் தகவல், பாதுகாக்கவேண்டிய பதிவுகள், படங்கள், டிரான்ஸ்கிரிப்ட்டுகள், தனிப்பட்ட தகவலைக் கொண்ட இணைப்புகள் போன்ற தனிப்பட்ட அல்லது ரகசியத் தகவல்கள் அடங்கிய உள்ளடக்கத்தையோ அத்தகைய உள்ளடக்கத்தை வழங்குமாறு கேட்பதையோ நாங்கள் அனுமதிப்பதில்லை.

வணிகர்கள் தங்கள் பிசினஸிற்கான தொடர்புத் தகவலை (சமூக வலைதள ஹேண்டில்கள், மின்னஞ்சல் முகவரி, ஃபோன் எண்) அவர்களின் சொந்த பிசினஸ் சுயவிவரத்திலோ கருத்துகள், கேள்விபதில் போன்றவற்றுக்குப் பதிலளிக்கும் வகையிலோ இடுகையிடலாம். இருந்தாலும் தனிப்பட்ட அல்லது ரகசியத் தகவலை வழங்குமாறு கேட்பதை நாங்கள் அனுமதிப்பதில்லை.

உதவிக்குறிப்பு: நீங்கள் சுயவிவரத்தில் செய்த மாற்றமோ உங்கள் இடுகையோ நிராகரிக்கப்பட்டால் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளடக்கம் நிராகரிக்கப்பட்டிருப்பதற்கான பல காரணங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

பிசினஸ் குறித்த விளக்கம்

பிசினஸ் குறித்த விளக்கத்திற்கான புலத்தைப் பயன்படுத்தி நீங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் குறித்த பயனுள்ள தகவல்களுடன் உங்கள் பிசினஸின் நோக்கம், வரலாறு ஆகியவற்றையும் வழங்கலாம்.

நீங்கள் வழங்கும் தகவல்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். அத்துடன், வாடிக்கையாளர்கள் உங்கள் பிசினஸைப் புரிந்துகொள்ளும் வகையில் தொடர்புடைய தகவல்களையும் பயனுள்ள தகவல்களையும் வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்கள் பிசினஸ் உடன் தொடர்பில்லாத உள்ளடக்கம் அல்லது அதனுடன் உள்ள தொடர்பைத் தெளிவாக விவரிக்காத உள்ளடக்கத்திற்கு அனுமதி இல்லை.

உங்கள் பிஸினஸ் குறித்த விளக்கம், எங்களின் ஒட்டுமொத்த தடைசெய்யப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் குறித்த வழிகாட்டுதல்களுடன் இணங்குவதோடு கீழே உள்ளவற்றையும் பின்பற்றுவதை உறுதிசெய்துகொள்ளவும்:

  • தரம் குறைந்த, பொருத்தமற்ற அல்லது கவனத்தைத் திசைதிருப்பும் உள்ளடக்கத்தை வெளியிடக்கூடாது. எடுத்துக்காட்டாக, எழுத்துப்பிழைகள், ஏமாற்றும் வகையிலான வார்த்தை உபயோகம், பயனில்லாத தகவல்கள் போன்றவை.
  • சிறப்பு விளம்பரங்கள், கட்டணங்கள், சலுகை விற்பனை போன்ற விவரங்கள் மீது கவனம் செலுத்தக்கூடாது. "விற்பனை செய்யப்படும் எல்லாவற்றிலும் 50% தள்ளுபடி", "ஊரிலேயே சிறந்த பர்கர் $5 மட்டுமே!” போன்றவை அனுமதிக்கப்படாத உள்ளடக்கமாகும்.
  • இணைப்புகளைக் காட்டக்கூடாது. எந்த வகையான இணைப்புகளுக்கும் அனுமதியில்லை.
பெயர்

ஆன்லைனில் உங்கள் பிசினஸை வாடிக்கையாளர்கள் கண்டறிய உதவ, உங்கள் பிசினஸ் பெயரை மிகவும் துல்லியமாக வழங்கவும். உங்கள் கடையின் முகப்பு, இணையதளம், அலுவலகப் பொருட்கள் போன்றவற்றில் நீங்கள் குறிப்பிடும் பெயர் நிஜ உலகில் வாடிக்கையாளர்கள் உங்களை எளிதில் அடையாளம் காணும் பிசினஸ் பெயராக இருக்க வேண்டும்.

உங்கள் பிசினஸ் தகவலின் பிற பிரிவுகளில் முகவரி, சேவைப் பகுதிவணிக நேரம், வகை போன்ற கூடுதல் விவரங்களைச் சேர்க்க வேண்டும். 

எடுத்துக்காட்டாக, சென்னையில் உள்ள ராஜா காஃபி பார் என்ற 24 மணிநேர காஃபி ஷாப்பிற்கு Business Profileலை உருவாக்குகிறீர்கள் எனில் அதன் பிசினஸ் தகவல்களை இவ்வாறு வழங்க வேண்டும்:

  • பிசினஸ் பெயர்: ராஜா காஃபி பார்
  • முகவரி: கோயில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600033
  • வணிக நேரங்கள்: 24 மணிநேரமும் திறந்திருக்கும்
  • வகை: காஃபி ஷாப்

உங்கள் பிசினஸின் பெயரில் தேவையற்ற தகவலைச் சேர்ப்பதற்கு அனுமதியில்லை, அவ்வாறு செய்தால் உங்கள் Business Profile இடைநிறுத்தப்படலாம். கீழே உள்ள குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகள் மூலம் உங்கள் பிசினஸின் பெயரில் சேர்க்கக்கூடிய மற்றும் சேர்க்கக்கூடாத விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

பிசினஸ் பெயருக்கான எடுத்துக்காட்டுகள்

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகளில் சாய்வெழுத்துகளில் இருக்கும் பெயர்கள் அல்லது பெயரின் பாகங்கள் அனுமதிக்கப்படாது.

உங்கள் பிசினஸின் பெயரில் இவற்றைச் சேர்க்கக்கூடாது:

ஏற்கத்தக்கதல்ல:

ஏற்கத்தக்கது:
மார்க்கெட்டிங் பன்ச்லைன்கள்
  • TD Bank, America’s Most Convenient Bank
  • GNC Live Well
  • TD Bank
  • GNC
ஸ்டோர் குறியீடுகள்
  • The UPS Store - 2872
  • The UPS Store

வர்த்தகமுத்திரை/பதிவுசெய்த சின்னங்கள்

  • Burger King®
  • Burger King

முழுவதும் பெரிய எழுத்துகளில் இருப்பது

  • SUBWAY
  • Subway, KFC, IHOP, JCPenney

வணிக நேரம் குறித்த தகவல்

  • Regal Pizzeria 24 மணிநேரமும் திறந்திருக்கும்
  • Sears Outlet (மூடப்பட்டுள்ளது)
  • Regal Pizzeria
  • Sears Outlet

ஃபோன் எண்கள் அல்லது இணையதள URLகள்

  • Airport Direct 1-888-557-8953
  • webuyanycar.com
  • Airport Direct
  • 1-800-Got-Junk

சிறப்பு எழுத்துக்குறிகள் (எ.கா. %$@/") அல்லது தொடர்பற்ற சட்டச் சொற்கள்

  • Shell Pay@Pump
  • Re/Max, LLC
  • LAZ Parking Ltd
  • Shell
  • Re/Max
  • LAZ Parking
  • Toys ’’R’’ Us
  • H&M
  • T.J.Maxx

சேவை அல்லது தயாரிப்புத் தகவல்கள்

  • Verizon Wireless 4G LTE
  • Midas வாகனச் சேவை நிபுணர்கள்
  • Verizon Wireless
  • Midas
  • Best Buy Mobile
  • Advance Auto Parts
  • JCPenney Portrait Studios

இருப்பிடத் தகவல்

  • Holiday Inn (எக்சிட் 2ல் I-93)
  • U.S. Bank ATM - 7வது & பைக் - லிஃப்ட் அருகே பார்க்கிங் கேரேஜ் லாபி
  • Equinox, SOHO அருகில்
  • Holiday Inn சேலம்
  • U.S. Bank ATM
  • Equinox SOHO
  • கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)

இடத்தை வரையறுக்கும் தகவல்

  • Chase ATM (டுவெயின் ரீட் வளாகத்தில்)
  • Apple Store ஸ்டான்ஃபோர்டு ஷாப்பிங் சென்டரில்
  • Benefit Brow Bar - புளூமிங்டேல்ஸ்
  • Sam’s Club Tire & Battery (Sam’s Clubன் அங்கம்)
  • Geek Squad (Best Buy வளாகத்தினுள்)
  • Chase ATM
  • Apple Store
  • Benefit Brow Bar
  • Sam’s Club Tire & Battery
  • Geek Squad
பல இருப்பிடங்களில் உள்ள பிசினஸ்கள் (சங்கிலியமைப்பு நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள்), துறைகள், தனித்துத் தொழில் செய்பவர்கள் (எ.கா. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டுகள்) ஆகியோருக்கான கூடுதல் வழிகாட்டுதல்கள் கீழே உள்ளன.
முகவரி

உங்கள் பிசினஸ் இருப்பிடத்தை விவரிக்கத் துல்லியமான, தெளிவான முகவரி மற்றும்/அல்லது சேவைப் பகுதியைப் பயன்படுத்த வேண்டும். தொலைவான இடங்களில் அமைந்திருக்கும் அஞ்சல் பெட்டி அல்லது தபால்பெட்டி எண்கள் ஏற்கப்படாது.

  • நிஜ உலகில் உங்கள் பிசினஸ் அமைந்திருக்கும் இடத்திற்கு Business Profileலை உருவாக்கவும்.
    • அறை எண்கள், தளங்கள், கட்டட எண்கள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். அதிகாரப்பூர்வத் தெரு முகவரியானது பிசினஸின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் குறிக்காத பகுதிகளில் மட்டும் குறுக்குத் தெருக்கள் பற்றிய தகவலையோ அருகிலுள்ள இட அடையாளங்களையோ குறிப்பிடலாம்.
    • அஞ்சல் பெட்டி எண்ணையோ அறை எண்ணையோ குறிப்பிட வேண்டுமெனில்:
      • "முகவரி வரி 1" என்பதில் உங்கள் இருப்பிடத்தின் முகவரியை வழங்கவும்.
      • "முகவரி வரி 2"ல் அஞ்சல் பெட்டி அல்லது அறை எண்ணை உள்ளிடவும்.
    • உங்கள் பிசினஸிற்கென வாடகைக்கு ஓர் இருப்பிடம் இருந்தாலும் அது அங்கு செயல்படாமல் விர்ச்சுவலாக இயங்கும் பட்சத்தில் அந்த இருப்பிடத் தகவல் Googleளில் உள்ள Business Profileலில் காட்டப்படுவதற்குத் தகுதி பெறாது.
    • 'பகிர்ந்த பணியிடங்களில்' உள்ள அலுவலகம் பின்வரும் வகையில் இல்லாத பட்சத்தில் அதைப் பட்டியலிட முடியாது: தெளிவான பெயர்ப் பலகையை வைத்திருக்க வேண்டும், வணிக நேரத்தில் வாடிக்கையாளர்கள் வரும்படி இருக்க வேண்டும், பிசினஸ் ஊழியர்கள் வணிக நேரங்களில் அங்கு பணியாற்ற வேண்டும்.
  • URLகள், தேடல் குறிப்புகள் போன்ற உங்கள் பிசினஸ் இருப்பிடத்திற்குத் தொடர்பற்ற தகவல்களை முகவரி வரிகளில் சேர்க்கக்கூடாது.
  • ஒரு கணக்கையோ பல கணக்குகளையோ பயன்படுத்தி உங்கள் பிசினஸின் ஒவ்வொரு இருப்பிடத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்களை உருவாக்கக்கூடாது.
    • தனித்துத் தொழில் செய்பவர்களும், பிசினஸ்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், அரசாங்கக் கட்டடங்கள் ஆகியவற்றுக்குள் இருக்கும் துறைகளும் தனித்தனிப் பக்கங்களை வைத்துக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு தனித்துச் செயல்படுபவர்கள், துறைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.
  • Googleளில் தங்கள் முகவரியைக் காட்டும் பிசினஸ்கள், அந்த முகவரியில் அவர்களுக்கென ஒரு நிரந்தரமான பெயர்ப் பலகையை வைத்துக்கொள்ள வேண்டும்.
  • உங்கள் முகவரியில் தெரு எண் இல்லை என்றாலோ சிஸ்டத்தினால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ உங்கள் பிசினஸ் இருப்பிடத்தை வரைபடத்தில் நீங்களே பின் செய்யலாம்.

இருப்பிடச் சேவை பிசினஸ்கள்

இருப்பிடச் சேவை பிசினஸ்கள் அல்லது வாடிக்கையாளர்களின் இடத்திற்குச் சென்று சேவையளிக்கும் பிசினஸ்கள் தங்கள் பிரதான அலுவலகத்திற்கோ இருப்பிடத்திற்கோ ஒரு சுயவிவரத்தை உருவாக்கி வைத்திருப்பதுடன் குறிப்பிட்ட ஒரு சேவைப் பகுதியையும் வைத்திருக்க வேண்டும். இருப்பிடச் சேவை பிசினஸ்களின் பணியாளர்கள் வணிக நேரத்தில் பணியாற்றினால் மட்டுமே அந்த பிசினஸ்களை "விர்ச்சுவல்" அலுவலகமாகக் கருத முடியும்.

வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்கென கேரேஜ் வைத்திருப்பது, சாலையில் செல்லும்போது வாகனம் பழுதாகிவிட்டால் அந்த இடத்திற்கே வந்து அதைச் சரிசெய்வது போன்ற சேவையை வழங்கும் சில பிசினஸ்கள் 'ஹைப்ரிட் இருப்பிடச் சேவை பிசினஸ்கள்' எனப்படும். இவை தங்களின் Business Profileலில் கடையின் முகப்பில் உள்ள முகவரியை வெளியிடுவதுடன் சேவைப் பகுதியையும் நியமித்துக்கொள்ளலாம். உங்கள் முகவரியில் வாடிக்கையாளர்களுக்குச் சேவையை வழங்குவதுடன் சேவைப் பகுதியையும் அமைக்க விரும்பினால் உங்கள் பிசினஸ் இருப்பிடத்தில் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். அத்துடன் குறிப்பிட்டிருக்கும் வணிக நேரத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகச் சேவையை வழங்க வேண்டும்.

உங்கள் பிசினஸ் தகவல்களின் அடிப்படையிலும் பிற ஆதாரங்களில் இருந்து பெறும் தகவல்களின் அடிப்படையிலும் உங்கள் பிசினஸ் முகவரியை எவ்வளவு சிறப்பாகக் காட்சிப்படுத்துவது என்பதை Google தீர்மானிக்கும்.

கடை முகப்புள்ள பிசினஸ்களுக்கும் இருப்பிடச் சேவை பிசினஸ்களுக்கும் இடையேயான வேறுபாடுகள்

உங்கள் பிசினஸிற்குத் தெளிவான பெயர்ப் பலகையுடன்கூடிய முகப்பு இல்லையென்றாலும் வாடிக்கையாளர்களின் இடத்திற்குச் சென்று நேரடியாகச் சேவைகளை வழங்குகிறீர்கள் எனில் இருப்பிடச் சேவை பிசினஸ் சுயவிவரத்தை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

உங்கள் சேவை பிசினஸிற்கு வெவ்வேறு இருப்பிடங்களும் வெவ்வேறு சேவைப்பகுதிகளும் இருந்து, ஒவ்வொரு இருப்பிடத்திற்கும் தனிப்பட்ட பணியாளர்கள் இருந்தால் ஒவ்வொரு இருப்பிடத்திற்கும் ஒரு சுயவிவரத்தை வைத்துக் கொள்ளலாம். பிசினஸ் அமைந்துள்ள இடத்திலிருந்து 2 மணிநேர பயணத் தொலைவிற்குள் உள்ள பகுதிகளுக்கு அப்பால் உங்கள் சுயவிவரத்தின் சேவைப் பகுதி இருக்கக்கூடாது. சில பிசினஸ்களுக்கு, பெரிய அளவிலான சேவைப் பகுதிகள் பொருந்தலாம்.

இருப்பிடச் சேவை பிசினஸ்கள் பற்றி மேலும் அறிக.

இருப்பிடச் சேவை பிசினஸாக இருந்தால் உங்கள் பிசினஸ் முகவரியை வாடிக்கையாளர்களுக்குக் காட்டக்கூடாது. 

  • எடுத்துக்காட்டாக, நீங்கள் வீட்டிலிருந்தே பிசினஸை நடத்தும் பிளம்பராக இருந்தால் Business Profileலில் இருந்து முகவரியை அழிக்கவும்.

பிசினஸ் முகவரியைச் சேர்ப்பது அல்லது திருத்துவது எப்படி என அறிக.

இணையதளம் & ஃபோன் எண்

உங்கள் பிசினஸின் ஒரு குறிப்பிட்ட இடத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய ஃபோன் எண்ணை வழங்கவும் அல்லது உங்கள் பிசினஸின் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிக்கும் இணையதள முகவரியை வழங்கவும்.

  • முடிந்தவரை, பொதுவான ஹெல்ப்லைன் எண்ணுக்குப் பதிலாக உள்ளூர் ஃபோன் எண்ணைப் பயன்படுத்தவும்.
  • சமூக வலைதளங்களில் உருவாக்கிய பக்கங்கள் உட்பட, பிசினஸுக்குத் தொடர்பில்லாத பக்கங்களுக்கோ ஃபோன் எண்களுக்கோ பயனர்களைத் திசைதிருப்பக்கூடிய அல்லது "பரிந்துரைக்கின்ற" ஃபோன் எண்கள் அல்லது URLகளை வழங்காதீர்கள்.
  • நீங்கள் வழங்கும் ஃபோன் எண் பிசினஸின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
  • Google Business Profile இணையதளங்களிலும் பிற உள்ளூர் தளங்களிலும் கூடுதல் ஃபோன் எண்களைப் பயன்படுத்தலாம்.
  • பிரீமியக் கட்டண ஃபோன் எண்களுக்கு அனுமதி இல்லை. இவற்றைப் பயன்படுத்தும் அழைப்பாளரிடமிருந்து அதிகக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
வணிக நேரம்

நீங்கள் வழக்கமாக வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்திக்கும் வணிக நேரத்தை வழங்கவும். உங்கள் வணிகத்துக்குப் பொருந்தினால், நடப்பு சீசனின் வணிக நேரங்களை உங்கள் வழக்கமான வணிக நேரங்களாகப் பயன்படுத்தலாம். மேலும் விடுமுறைகள், சிறப்பு நிகழ்வுகள் போன்ற குறிப்பிட்ட நாட்களுக்குச் சிறப்பு வணிக நேரத்தையும் குறிப்பிடலாம்.

பல்வேறு வணிக நேரங்களைக் கொண்டவை (ஷோ நேரங்கள், வழிபாட்டு நேரங்கள் அல்லது வகுப்புகள் உள்ளிட்ட ஒவ்வொரு வகையான செயல்பாடுகளுக்கேற்ற கால அட்டவணை கொண்டவை) மற்றும் முன் அனுமதியின் அடிப்படையில் மட்டும் இயங்குபவை உள்ளிட்ட சில வகையான பிசினஸ்கள் தங்கள் வணிக நேரங்களை வழங்கக் கூடாது. வணிக நேரத்தை வழங்கக்கூடாத பிசினஸ்களுக்கான எடுத்துக்காட்டுகளில் பின்வருபவை மட்டுமின்றி மேலும் பல பிசினஸ்களும் அடங்கும்:

  • ஹோட்டல்கள், நெடுஞ்சாலை ஹோட்டல்கள், அபார்ட்மண்ட் கட்டடங்கள்/வளாகங்கள் போன்ற தங்கும் வசதிகளை வழங்கும் பிசினஸ்கள்
  • பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்
  • திரையரங்குகள்
  • போக்குவரத்துச் சேவைகள் மற்றும் விமான நிலையங்கள்
  • நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் இயற்கைச் சூழல் நிறைந்த இடங்கள்

உங்கள் பிசினஸுக்குப் பல துறைகள் இருந்தால் அந்தந்தத் துறைக்கெனத் தனியாக இருக்கும் Business Profileலில் ஒவ்வொரு துறையின் வணிக நேரத்தை வழங்கவும். மேலும், முதன்மை Business Profileலில் முதன்மை பிசினஸுக்கான வணிக நேரத்தையும் வழங்கவும். துறைகளைப் பற்றி அறிக.

நேரப் பிரிவுகள்

உங்கள் பிசினஸுக்குப் பல்வேறு நேரப் பிரிவுகள் இருந்தால் குறிப்பிட்ட தொழில்துறைகளுக்கான இந்த வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்:

  • வங்கிகள்: முடிந்தால் லாபி நேரங்களைப் பயன்படுத்தலாம். அல்லது வாகனத்தில் இருந்தபடியே சேவைகளைப் பெறுவதற்கான நேரங்களைப் பயன்படுத்தலாம். வங்கியுடன் இணைந்திருக்கும் ஒரு ATM அதன் வெவ்வேறு நேரங்களுடன் அதற்குரிய தனி Business Profileலைப் பயன்படுத்தலாம்.
  • கார் டீலர்ஷிப்கள்: கார் விற்பனை நேரங்களைப் பயன்படுத்தலாம். புதிய கார் விற்பனை நேரங்களும் பயன்படுத்திய கார் விற்பனை நேரங்களும் வேறாக இருந்தால், புதிய கார் விற்பனை நேரங்களைப் பயன்படுத்தலாம்.
  • பெட்ரோல் பங்க்குகள்: உங்கள் பெட்ரோல் பங்க்கின் வணிக நேரங்களைப் பயன்படுத்தலாம்.
  • உணவகங்கள்: வாடிக்கையாளர்கள் உங்கள் உணவகத்தில் அமர்ந்து உணவருந்தக்கூடிய நேரங்களைப் பயன்படுத்தலாம். அல்லது பார்சல் வாங்கிச் செல்வதற்கான நேரங்களைப் பயன்படுத்தலாம். இவை எதையும் குறிப்பிட முடியவில்லை என்றால், நேரடியாக வந்து செல்வதற்கான நேரங்களை அல்லது அதுவும் முடியாது என்றால் டெலிவரி நேரங்களைப் பயன்படுத்தலாம்.
  • ஸ்டோரேஜ் சேவைகள்: பணி நேரங்களைப் பயன்படுத்தலாம். அல்லது பிரதான வாயிலின் பணி நேரங்களைப் பயன்படுத்தலாம்.
  • குறிப்பிட்ட சேவைகளுக்கான வணிக நேரங்களைத் தனிப்படுத்திக் காட்ட கூடுதல் நேரங்களையும் நீங்கள் அமைக்கலாம்.
    • பொதுவாக, முதன்மை வணிக நேரத்தின் துணைத் தொகுப்பாகக் 'கூடுதல் நேரத்தை' அமைக்க வேண்டும்.

சீசன் நேரங்கள்

உங்கள் பிசினஸ் செயல்படும் நேரம் சீசனுக்கு ஏற்ப மாறுபடும் என்றால் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்:

  • உங்கள் பிசினஸ் திறந்திருக்கும் சீசனின் வழக்கமான வணிக நேரத்தை அமைக்கவும். விடுமுறைகள், தற்காலிகமாக மூடும் சூழ்நிலைகள், பிற நிகழ்வுகள் போன்றவற்றுக்கு சிறப்பு வணிக நேரத்தை அமைக்கலாம்.
    • குறிப்பிட்ட சீசனுக்கு மட்டுமே பிசினஸ் திறந்திருக்கும் என்பதையும் உங்கள் பிசினஸ் விளக்கத்தில் குறிப்பிடலாம்.
  • சீசன் அல்லாத நேரங்களில் உங்கள் பிசினஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகக் குறிக்கலாம்.
    • பிசினஸை மீண்டும் திறக்கும்போது வழக்கமான வணிக நேரத்தை அமைக்கவும்.
வகைகள்

வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த சேவைகளின் குறிப்பிட்ட முடிவுகளைத் துல்லியமாகக் கண்டறிய வகைகள் உதவும். உங்கள் பிசினஸ் தகவல்களைத் துல்லியமாகவும் சமீபத்திய விவரங்களுடனும் வைத்துக்கொள்ள, இவற்றைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்:

  • உங்கள் பிசினஸின் முக்கியச் செயல்பாட்டை விவரிக்கக்கூடிய மிகச் சில வகைகளை மட்டும், கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து பயன்படுத்தவும்.
  • வகைகளை முடிந்தளவு மிகச்சரியாகக் குறிப்பிடுவதாகவும், உங்கள் பிரதான வணிகத்தைப் பிரதிபலிப்பதாகவும் தேர்வுசெய்யவும்.
    • வகைகளைத் தேடல் குறிப்புகளாகவோ அல்லது உங்கள் வணிகத்தைக் குறிப்பனவாகவோ மட்டும் பயன்படுத்தாதீர்கள்.
    • உங்கள் பிசினஸின் அருகிலுள்ள அல்லது தொடர்புடைய மற்ற பிசினஸ்கள் அதாவது உங்கள் பிசினஸ் இருப்பிடத்திற்குள் அமைந்துள்ள வேறொரு பிசினஸையோ உங்கள் பிசினஸை அமைப்பதற்கு இடம் கொடுத்திருக்கும் ஒரு நிறுவனத்தையோ குறிக்கின்ற வகைகளைப் பயன்படுத்தாதீர்கள்.

உங்கள் பிசினஸ் வகையைத் தேர்ந்தெடுக்கவும்

"இந்த பிசினஸில் இது உள்ளது" என்பதைவிட "இந்த பிசினஸ் இப்படிப்பட்டது" என்பதை விளக்கும் முறையில் வகைகளைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பிசினஸ் வழங்கும் சேவைகள், விற்கும் தயாரிப்புகள், பிசினஸில் கிடைக்கும் வசதிகள் போன்றவற்றைப் பட்டியலிடுவதைவிட ஒரே வார்த்தையில் உங்கள் பிசினஸைப் பற்றி முழுமையாகக் கூறுவதே இதன் நோக்கம்.

உங்கள் பிசினஸுக்கு அதிகத் தொடர்புடைய குறிப்பிட்ட வகைகளைச் சேர்ப்பதில் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். பின்னணியில் செய்ய வேண்டிய மற்ற விஷயங்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம். உதாரணமாக, "கோல்ஃப் ரிசார்ட்" என்ற குறிப்பிட்ட வகையை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது "ரிசார்ட் ஹோட்டல்", "ஹோட்டல்", "கோல்ஃப் மைதானம்" போன்ற மிகவும் பொதுவான வகைகளை Google தானாகவே சேர்த்துக்கொள்ளும். நீங்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட வகையைப் போலவே ஏதேனும் வகை இருந்தால் அதைத் தேர்வுசெய்யாமல் தவிர்க்க வேண்டும். உங்கள் பிசினஸுக்கான வகை காட்டப்படவில்லை என்றால் பொதுவான ஒரு வகையைத் தேர்வுசெய்யவும். உங்கள் இணையதளத்தில் இருந்தும் இணையத்தில் உங்கள் பிசினஸைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் இருந்தும் வகையைப் பற்றிய தகவலை Googleளால் கண்டறிய முடியும்.

சூழல்

சரியான வகை

தவறான வகை

பீட்சா பார்சல் மற்றும் டெலிவரி சேவைகளை ”Papa John’s" வழங்குகிறது, ஆனால் கடையிலேயே அமர்ந்து உண்ணும் வசதியை வழங்குவதில்லை.

  • பீட்சா டெலிவரி
  • பீட்சா பார்சல்
  • டெலிவரி உணவகம்
  • பார்சல் உணவகம்

“Navy Federal Credit Union"

  • ஃபெடரல் கிரெடிட் யூனியன்
  • வங்கி

"Super 8" என்பது நீச்சல் குளத்துடன் கூடிய ஒரு நெடுஞ்சாலை ஹோட்டல்.

  • நெடுஞ்சாலை ஹோட்டல்
  • ஹோட்டல்
  • நீச்சல் குளம்

“24-Hour Fitness”

  • ஹெல்த் கிளப்
  • உடற்பயிற்சிக் கூடம்
  • நீச்சல் குளம்
“A1 Check Cashing”
  • காசோலைக்குப் பணமளிக்கும் சேவை
  • வங்கி மற்றும் நிதிச் சேவை
"Wendy’s" என்பது சில டெசர்ட்களையும் வழங்கும் ஒரு ஃபாஸ்ட் புட் ஹாம்பர்கர் உணவகம் ஆகும்.
  • துரித உணவு உணவகம்
  • ஹாம்பர்கர் உணவகம்
  • டெசர்ட் உணவகம்

உங்கள் நிறுவனம் இயக்காத, அதற்குச் சொந்தமல்லாத வேறொரு பிசினஸ் உங்கள் பிசினஸுக்குள் இருந்தால் உங்கள் பிசினஸைக் குறிப்பிடக்கூடிய வகைகளை மட்டுமே பயன்படுத்தவும்.

எடுத்துக்காட்டுகள்:

  • "Barnes and Nobles" பிசினஸுக்குள் இயங்கும் "Starbucks" பிசினஸ்.
    • “Starbucks” பிசினஸின் வகை: “காஃபி ஷாப்”
    • “Barnes and Nobles” பிசினஸின் வகை: “புத்தகக் கடை” மட்டுமே. “காஃபி ஷாப்” என்ற வகையைச் சேர்க்கக் கூடாது.
  • "7-Eleven" பிசினஸுக்குள் இயங்கும் "Cardtronics ATM" பிசினஸ்.
    • “Cardtronics ATM” பிசினஸின் வகை: “ATM”
    • “7-Eleven” பிசினஸின் வகை: “பல்பொருள் அங்காடி” மட்டுமே. “ATM” என்ற வகையைச் சேர்க்கக் கூடாது.
  • "Hard Rock Hotel" பிசினஸுக்குள் இயங்கும் "Nobu" பிசினஸ்.
    • “Nobu” பிசினஸின் வகை: “உணவகம்”
    • “Hard Rock Hotel” பிசினஸின் வகை: “ஹோட்டல்” மட்டுமே. “உணவகம்” என்ற வகையைச் சேர்க்கக் கூடாது.

ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த வகை பிசினஸ்கள் அவற்றுக்கென்று சொந்தமாகச் சுயவிவரத்தை வைத்திருக்க வேண்டும். ஒரே பிசினஸ் இருப்பிடத்திற்கு இரு வகைகளையும் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு சுயவிவரத்திற்குப் பதிலாக இரண்டு சுயவிவரங்களை உருவாக்கவும். இரண்டாவது பிசினஸுக்கு வேறொரு பெயரைப் பயன்படுத்தவும். துறைகளைப் பற்றி அறிக.

  • ஹோட்டல்/நெடுஞ்சாலை ஹோட்டலுக்குள் இருக்கும் உணவகம்/கஃபே/பார்
  • சூப்பர்மார்க்கெட்/மளிகைக் கடைக்குள் இருக்கும் மருந்துக் கடை
  • சூப்பர் மார்க்கெட்/மளிகைக் கடைக்கு அடுத்துள்ள பெட்ரோல் பங்க்
மெனு

மெனுக்களில் 2 வகைகள் உள்ளன:

  • சாப்பாடு மற்றும் பானங்கள் விற்பனை செய்யும் இடத்தில் (உணவகங்கள் அல்லது காக்டெயில் பார்கள் போன்றவை) என்னென்ன வகையான உணவு மற்றும் பானங்கள் கிடைக்கும் என்கிற முழு விவரத்தையும் பட்டியலிடும் மெனு.
  • முடி திருத்தகம், ஸ்பா, கார் பழுதுபார்க்கும் இடம் போன்ற சேவை பிசினஸில் என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்கிற முழுத் தொகுப்பையும் வழங்கும் மெனு.
இரு வகையான மெனுவும் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்:
  • அந்த வணிக இடத்தில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை அறியும் வகையில் மெனு இருக்க வேண்டும். முழு மெனுக்களில் சாப்பாட்டைக் குறிப்பிட்டு (காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு) பிற மெனு பக்கங்களுக்கான இணைப்புகளையும் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் வணிகத்தின் இரவு உணவு மெனுவிற்கான இணைப்பைத் தேர்வுசெய்யலாம், அதில் காலை உணவு மற்றும் மதிய உணவுக்கான மெனுக்களின் இணைப்புகள் இடம்பெற்றிருக்கலாம்.
  • "பிரபலமானவற்றை" (அல்லது அது போன்ற குறிப்பிட்ட சில) மட்டும் பட்டியலிடும் மாதிரி மெனுக்களைச் சமர்ப்பிக்கக்கூடாது.
  • ஆர்டர் செய்தல்/டெலிவரி சேவைகளை வழங்கும் மூன்றாம் தரப்பு பக்கங்களுக்கான நேரடி இணைப்புகளாக மெனு URLகள் இருக்கக்கூடாது.
  • நிறுவனங்களின் சார்பாக அவர்களின் வணிகச் சுயவிவரங்களை நிர்வகிக்கும் மூன்றாம் தரப்பினர் ஒரு வணிகத்தின் மெனு URLலைச் சமர்ப்பிக்க அதை அந்த வணிகத்தின் உரிமையாளருக்குத் தெரியப்படுத்தி அவரது ஒப்புதலைப் பெற வேண்டும்.
தயாரிப்புகள்

தகுதிபெறும் நாட்டில் (அமெரிக்கா, கனடா, யுனைடெட் கிங்டம் மற்றும் அயர்லாந்து) நீங்கள் ஒரு ரீடெய்ல் பிசினஸை நடத்தி வந்தால் உங்கள் ஸ்டோரில் கிடைக்கும் தயாரிப்புகளை Business Profileலில் தானாகவே காட்டுவதன் மூலம், ஆன்லைனில் தேடுபவர்களை ஸ்டோருக்கு வந்து ஷாப்பிங் செய்பவர்களாக மாற்றலாம்.

ஸ்டோரில் கிடைக்கும் தயாரிப்புகளைச் சேர்க்க:

இந்த இரண்டு முறைகளும் பின்வரும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்:

  • ப்ராடக்ட் எடிட்டர் மூலம் தானாகவே சமர்ப்பிக்கப்படும் தயாரிப்புகள் ஷாப்பிங் விளம்பரக் கொள்கைக்குக் கட்டாயம் இணங்க வேண்டும். ஷாப்பிங் விளம்பரக் கொள்கையைப் பற்றி மேலும் அறிக.
  • மது, புகையிலைத் தயாரிப்புகள், சூதாட்டம், நிதிச் சேவைகள், மருந்துகள், அங்கீகரிக்கப்படாத ஊட்டச்சத்துப் பொருட்கள், உடல்நலம்/மருத்துவம் சார்ந்த சாதனங்கள் ஆகியவை உட்பட கட்டுப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான உள்ளடக்கத்தை அனுமதிக்க மாட்டோம்.
  • Googleளின் கொள்கையை மீறும் தயாரிப்புகளைச் சமர்ப்பித்தால், கொள்கையை மீறாத தயாரிப்புகள் உட்பட தயாரிப்புகள் பட்டியலில் உள்ள அனைத்தும் அகற்றப்படலாம்.

சங்கிலியமைப்பு நிறுவனங்கள், துறைகள் மற்றும் தனித்துத் தொழில் செய்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

சங்கிலியமைப்பு நிறுவனங்களும் பிராண்டுகளும்

உங்கள் பிசினஸை Google Maps, தேடல் முடிவுகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் விரைவாகக் கண்டறிவதற்கு உதவ, அனைத்து பிசினஸ் இருப்பிடங்களிலும் ஒரே பெயரையும் வகைகளையும் பயன்படுத்தவும்.

நிஜ உலகில் பிசினஸைக் குறிப்பிடுவது ஒவ்வொரு இருப்பிடத்திற்கும் மாறுபட்டால் தவிர, ஒரே பெயரை எல்லா இருப்பிடங்களிலும் பயன்படுத்த வேண்டும். ஒரே சேவையை வழங்கும் அனைத்து இருப்பிடங்களுக்கும் ஒரே வகையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

சங்கிலியமைப்பு நிறுவனங்களுக்காக Business Profileலைப் பயன்படுத்தத் தொடங்குதல்.

ஒரே பெயரை தொடர்ந்துப் பயன்படுத்துதல்

ஒரு நாட்டில் உள்ள உங்களின் எல்லா பிசினஸ் இருப்பிடங்களும் ஒரே பெயரை அனைத்து இடங்களிலும் கொண்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, Home Depotடின் எல்லா இருப்பிடங்களும் "The Home Depot" என்ற பெயரையே பயன்படுத்த வேண்டும், "Home Depot" அல்லது "The Home Depot at Springfield" போன்ற பெயர்களைக் கொண்டிருக்கக் கூடாது.

இந்தக் கொள்கையில் 2 விதிவிலக்குகள் உள்ளன:

  • உங்களிடம் பல வகையான பிசினஸ்கள், துணை பிராண்டுகள், பல்வேறு துறைகள், சில்லறை மற்றும் மொத்த விற்பனை போன்ற பல்வேறு வகையான செயல்பாடுகள் இருந்தால், இவற்றை பிசினஸின் எல்லா இருப்பிடங்களிலும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தும்போது இந்த ஒவ்வொரு தனி வகைகளும் தனிப்பட்ட பெயரைக் கொண்டிருக்கலாம்.
    • ஏற்கத்தக்க பெயர் மாறுபாடுகள்: "Walmart Supercenter" மற்றும் "Walmart Express"; "Nordstrom" மற்றும் "Nordstrom Rack"; "Gap" மற்றும் "babyGap"
  • உங்களுடைய சில இருப்பிடங்கள் அவற்றின் கடை முகப்பு, இணையதளம், வர்த்தகப் பொருட்கள் போன்றவற்றில் வேறு பெயரை எப்போதும் பயன்படுத்தி வந்தால் அந்த இருப்பிடங்களில் இந்த மாற்றுப் பெயரைப் பயன்படுத்தலாம்.
    • ஏற்கத்தக்க பெயர் மாறுபாடுகள்: "Intercontinental Mark Hopkins San Francisco" மற்றும் "Intercontinental New York Barclay"; "PFK" (கியூபெக்கில் உள்ள இருப்பிடங்களில்) மற்றும் "KFC" (அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பிற பகுதிகளில் உள்ள இருப்பிடங்களில்)

ஒரே வகைப் பயன்பாடு

வணிகத்தின் எல்லா இருப்பிடங்களும் வணிகத்தைச் சரியாகக் குறிக்கும் ஒரே வகையைப் பயன்படுத்த வேண்டும். உங்களிடம் பல்வேறு வகையான இருப்பிடங்கள் இருந்தால் (எ.கா. துணை பிராண்டுகள், பல்வேறு துறைகள் அல்லது சில்லறை, விநியோக மையம் மற்றும் அலுவலகம் போன்ற பல்வேறு வகையான செயல்பாடுகள்) இந்த விதி இந்தத் துணைக் குழுக்கள் ஒவ்வொன்றுக்குள் மட்டும் பொருந்தும்.

  • "Gap Kids" வணிகத்தின் எல்லா இருப்பிடங்களும் "Children’s Clothing Store" என்ற வகையில் அடங்கும்
  • "Goodyear Auto Service Center" பிசினஸின் எல்லா இருப்பிடங்களும் "டயர் கடை" என்ற வகையில் அடங்கும்; அவை அனைத்தும் "வாகனப் பழுதுபார்ப்புக் கடை" என்ற வகையிலும் அடங்கும்
  • "PetSmart" பிசினஸின் அனைத்து இருப்பிடங்களும் "செல்லப்பிராணிகள் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்குமிடம்" என்ற வகையில் அடங்கும்; சில இருப்பிடங்களுக்கு வேறு வகைகள் இருக்கலாம் ("செல்லப்பிராணிகள் கடை", "நாய்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு மையம்" போன்றவை)

ஒரே இருப்பிடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராண்டுகள் இருப்பது

உங்கள் வணிகத்தின் இருப்பிடம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராண்டுகளைக் கொண்டிருந்தால் அந்தப் பிராண்டுப் பெயர்களை ஒரே வணிகச் சுயவிவரத்திற்குள் இணைக்காதீர்கள். அதற்குப் பதிலாக, Business Profileலுக்கு ஒரு பிராண்டுப் பெயரை மட்டும் தேர்வுசெய்யுங்கள். பிராண்டுகள் தனித்தனியாகச் செயல்பட்டால் இந்த இருப்பிடத்தில் ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு தனி சுயவிவரத்தைப் பயன்படுத்தலாம்.

ஒரே இருப்பிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விர்ச்சுவல் உணவு பிராண்டுகள் இயங்கினால் கீழே விர்ச்சுவல் உணவு பிராண்டுகள் பிரிவில் உள்ள அந்தந்த உணவுக்குரிய வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.

  • ஏற்கத்தக்கதல்ல: "KFC/Taco Bell" அல்லது "Dunkin' Donuts/Baskin Robbins"
  • ஏற்கத்தக்கது: "Taco Bell", "KFC", "Dunkin’ Donuts", "Baskin Robbins"

உங்கள் பிசினஸ் வேறு பிசினஸ் பிராண்டின் தயாரிப்புகளையோ சேவைகளையோ விற்பனை செய்தால் அந்த பிராண்டுக்கான Business Profileலை இந்த இருப்பிடத்தில் சேர்க்க முடியாது என்பதால் அதன் பிராண்டுப் பெயரைத் தவிர்த்துவிட்டு பிசினஸின் பெயரை மட்டும் பயன்படுத்தவும்.

  • ஏற்கத்தக்கதல்ல: "Staples/UPS", "America’s Tire/Firestone"
  • ஏற்கத்தக்கது: "Staples", "America’s Tire"

இருப்பினும், பிசினஸானது ஒரு பிராண்டுத் தயாரிப்பு அல்லது சேவையின் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய விற்பனையாளர் எனில் (சிலநேரங்களில் "ஃபிரான்சைஸி" என்றும் குறிப்பிடப்படுவர்) Business Profileலை உருவாக்கும்போது அந்தக் குறிப்பிட்ட பிராண்டின் பெயரைப் பயன்படுத்தலாம்.

  • ஏற்கத்தக்கது: "TCC Verizon Wireless Premium Retailer", "U-Haul Neighborhood Dealer"

விர்ச்சுவல் உணவு பிசினஸ்கள்

விர்ச்சுவல் உணவு பிசினஸ்கள் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகின்றன.

பிக்-அப் ஆர்டர் சேவையை வழங்கும் ஒரே இடத்திற்குள் செயல்படும் உணவு பிசினஸ்கள்

  • ஒரே இடத்திற்குள் செயல்படும் உணவு பிசினஸ்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நிரந்தரமான பெயர்ப் பலகைகள் இருக்க வேண்டும். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் பிக்-அப் ஆர்டர் சேவையை வழங்கினால் மட்டுமே தங்களின் முகவரியைக் காட்ட வேண்டும்.
    • பகிர்ந்த சமையலறைகளில் இருந்து டெலிவரி மட்டும் வழங்கும் பிராண்டுகள் (பிக்-அப் ஆர்டர் சேவை வழங்காதவர்கள்) தங்கள் முகவரியை மறைத்து, அந்தக் குறிப்பிட்ட பிராண்டில் சேவைப் பகுதிகளைச் சேர்க்க வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள்.

டெலிவரி மட்டுமே வழங்கும் உணவு பிசினஸ்கள்

  • டெலிவரி மட்டுமே வழங்கும் பிராண்டுகள் (அதாவது விர்ச்சுவல் சமையலறைகளில் இருந்து செயல்படுபவர்கள்) தங்கள் பிராண்டு அச்சிடப்பட்ட தனித்துவமான பேக்கேஜ்களையும் தனித்துவமான இணையதளத்தையும் வைத்திருந்தால் அனுமதிக்கப்படுகின்றன.
  • ஒரே இடத்தில் செயல்படும் பல விர்ச்சுவல் பிராண்டுகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அவை கூடுதல் சரிபார்ப்புப் படிகளுக்கு உட்பட்டவை.
  • டெலிவரி மட்டும் வழங்கும் பிராண்டுகள் அவர்களின் சேவைப் பகுதிகளைச் சேர்த்து, தங்களின் பிசினஸ் சுயவிவரத்தில் முகவரியை மறைக்க வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள்.
  • பார்ட்னர்ஷிப் அடிப்படையில் விர்ச்சுவல் சமையலறையை 'சரிபார்க்கப்பட்ட உணவு வழங்குநராக' ஓர் உணவு பிசினஸ் அங்கீகரித்திருந்தால், அங்கீகாரம் உறுதிப்படுத்தப்பட்டவுடன் அந்த விர்ச்சுவல் சமையலறை ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட பிராண்டின் பிசினஸ் சுயவிவரத்தையும் நிர்வகிக்கலாம்.
  • டெலிவரி மட்டும் வழங்கும் பிராண்டுகள் செயல்படும் சமைக்கும் பகுதி (அதாவது டோர்டாஷ் கிச்சன்கள்) அதற்கெனத் தனி சுயவிவரத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த இடத்துடன் தொடர்புடையவர் மட்டுமே இந்தச் சுயவிவரத்தை உரிமை கோரவும் சரிபார்க்கவும் முடியும்.

ரீபிராண்டிங்

உங்கள் பிசினஸின் பெயரில் உள்ள பெயர்ச்சொற்கள், சேவைகள் ஆகியவற்றையும் பிசினஸின் வகையையும் மாற்றாமல் வேறு ஏதேனும் சிறிய பெயர் மாற்றம் செய்தால் உங்கள் Business Profile ரீபிராண்டிங்கிற்கு (புதிய Business Profileலை உருவாக்காமல் தகுதியுடைய பெயர் மாற்றம் என்று வரையறுக்கப்படுவது) தகுதிபெறக்கூடும்.

உங்கள் பிசினஸுக்குப் பல இருப்பிடங்கள் இருந்து பிசினஸின் பெயரில் மாற்றங்கள் செய்தாலும் ரீபிராண்டிங்கிற்கு உங்கள் பிசினஸ் தகுதிபெறக்கூடும்.

மேலே குறிப்பிட்டுள்ள ரீபிராண்டிங் நிபந்தனைகள் உங்கள் பிசினஸிற்குப் பொருந்தினால் பிசினஸ் தகவல்களை மாற்றும்போது அதன் பெயரையும் மாற்றலாம். 

உங்கள் பிசினஸின் பெயரை மாற்றியிருந்து மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு அது இணங்கவில்லை எனில் அது புதிய பிசினஸாகவே கருதப்படும். ஏற்கெனவே இருக்கும் Business Profileலை ‘மூடப்பட்டது’ எனக் குறித்துவிட்டு, புதிய பிசினஸ் பெயரில் Business Profileலை உருவாக்க வேண்டும். பிசினஸ் சுயவிவரத்தை ‘மூடப்பட்டது’ எனக் குறிப்பது எப்படி என அறிக.

ரீபிராண்டிங் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்கள் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்

உதவிக்குறிப்பு: Business Profileலின் உரிமையை நீங்கள் புதிதாக ஏற்றுக்கொள்ள, முந்தைய உரிமையாளர் முதலில் உங்களை உரிமையாளராகச் சேர்த்திருப்பதுடன் உங்களுக்கு அதன் உரிமையை மாற்றியிருக்கவும் வேண்டும்.

பிற பிசினஸ்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றுக்குள் இருக்கும் துறைகள்

வணிகங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், அரசாங்க நிறுவனங்கள் ஆகியவற்றுள் இருக்கும் துறைகள் Googleளில் சொந்த வணிகச் சுயவிவரங்களை உருவாக்கலாம்.

வாகன டீலர்களுக்கும் மருத்துவச் சேவை வழங்குநர்களுக்கும் குறிப்பிட்ட, தனிப்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. வாகன டீலர்கள், மருத்துவச் சேவை வழங்குநர்கள் ஆகியோருக்கான Business Profileகள் வழிகாட்டி.

பொது மக்களை நேரடியாகச் சந்திக்கும் தனியாக இயங்கும் துறைகள் அவர்களுக்கென சொந்தப் பக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் வழங்கும் பெயர் முதன்மை பிசினஸுக்கும் பிற துறைகளுக்கும் வழங்கியுள்ள பெயருடன் வேறுபட வேண்டும். பொதுவாக இதுபோன்ற துறைகள் வாடிக்கையாளர் வருவதற்குத் தனி நுழைவாயிலைக் கொண்டிருக்கும், அவை ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட வகைகள் இருக்க வேண்டும். சில சமயங்களில் முதன்மை பிசினஸின் வணிக நேரமும் இந்தத் துறைகளுக்கான வணிக நேரமும் வேறுபட்டிருக்கக்கூடும்.

  • தனி Business Profileகளாக ஏற்கத்தக்கவை:
    • "Walmart Vision Center"
    • "Sears Auto Center"
    • "Massachusetts General Hospital Department of Dermatology"
  • தனி Business Profileகளாக ஏற்கத்தகாதவை:
    • Best Buyயில் உள்ள Apple தயாரிப்புகள் பிரிவு
    • Whole Foods Marketடிற்குள் இருக்கும் hot food bar

ஒவ்வொரு துறைக்கும் அந்தத் துறையை மிகச்சரியாக விவரிக்கும் வகையானது முதன்மை பிசினஸுக்கான வகைக்கும் பிற துறைகளுடைய வகைக்கும் வேறுபட்டதாக இருக்க வேண்டும்.

  • "Wells Fargo" என்ற முதன்மை பிசினஸின் வகை "வங்கி", அதே போல "Wells Fargo Advisors" என்ற துறையின் வகை "நிதி ஆலோசனை வழங்கும் நிறுவனம்".
  • "South Bay Toyota" என்ற முதன்மை பிசினஸின் வகை "Toyota டீலர்", அதே போல "South Bay Toyota Service & Parts" என்ற பிரிவுக்கான வகை "வாகனப் பழுதுபார்ப்புக் கடை" ("வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் கிடைக்கும் கடை" என்ற வகையும் பொருந்தும்).
  • "GetGo" என்ற முதன்மை பிசினஸின் வகை "பல்பொருள் அங்காடி" ("சாண்ட்விச் ஷாப்" என்ற வகையும் பொருந்தும்), அதே போல "GetGo Fuel" என்ற துறைக்கான வகை "எரிபொருள் நிலையம்", "WetGo" என்ற துறைக்கான வகை "கார் வாஷ்".
தனித்துத் தொழில் செய்பவர்கள்

’தனித்துத் தொழில் செய்பவர்’ என்பவர் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கக்கூடியவராகவும் தனக்கென ஒரு வாடிக்கையாளர் வட்டத்தைக் கொண்டவராகவும் இருப்பவர். மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிதி ஆலோசகர்கள், காப்பீடு/ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டுகள் ஆகிய அனைவருமே தனித்துத் தொழில் செய்பவர்கள் என வகைப்படுத்தப்படுகின்றனர். தனித்துத் தொழில் செய்பவர்களின் Business Profileகளில் பட்டம் அல்லது படிப்புச் சான்றிதழைச் சேர்க்கலாம் (எடுத்துக்காட்டாக, Dr., MD, JD, Esq., CFA).

தனித்துத் தொழில் செய்பவர்கள் பின்வரும் நிபந்தனைகளைப் பின்பற்றி அவர்களுக்கான Business Profileலை உருவாக்க வேண்டும்:

  • பொதுமக்களை நேரடியாகத் தொடர்புகொண்டு சேவை வழங்க வேண்டும். உதவிப் பணியாளர்கள் அவர்களுக்கென சொந்த Business Profileகளை உருவாக்கக்கூடாது.
  • குறிப்பிடப்பட்டுள்ள வணிக நேரத்தின்போது, சரிபார்க்கப்பட்ட இருப்பிடத்தில் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

அவர் தனது நிபுணத்துவங்கள் அனைத்தையும் குறிப்பிடுவதற்காகப் பல Business Profileகளை வைத்திருக்கக்கூடாது. விற்பனைக் கூட்டாளர்கள், பெரும் நிறுவனங்களுக்காக லீட் உருவாக்கும் ஏஜென்ட்டுகள் ஆகியோர் தனித்துத் தொழில் செய்பவர்களாகக் கருதப்படுவதில்லை என்பதால் Business Profileலை உருவாக்க அவர்கள் தகுதிபெற மாட்டார்கள்.

ஓர் இருப்பிடத்தில் பல நிபுணர்கள் இருப்பது

இந்த இருப்பிடத்தில் பொது மக்களை நேரடியாகச் சந்திக்கும் பல நிபுணர்களில் ஒருவராக அந்த நிபுணர் இருந்தால்:

  • நிறுவனமானது அந்த நிபுணருக்காக அல்லாமல் தனியாக இந்த இருப்பிடத்துக்காக ஒரு வணிகச் சுயவிவரத்தை உருவாக்க வேண்டும்.
  • நிபுணரின் வணிகச் சுயவிவரத்தின் தலைப்பில் நிபுணரின் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும், நிறுவனத்தின் பெயரைச் சேர்க்கக் கூடாது.

பிராண்டட் நிறுவனங்களைச் சேர்ந்த தனி நிபுணர்கள்

ஓர் இருப்பிடத்தில் பொது மக்களை நேரடியாகச் சந்திக்கும் ஒரே நிபுணராகவும் பிராண்டட் நிறுவனத்தின் பிரதிநிதியாகவும் இருந்தால் அந்த நிபுணர் தனது Business Profileலை அந்த நிறுவனத்துடன் பகிர்வதே உகந்தது. பின்வரும் வடிவமைப்பில் பெயரிட்டு ஒரு Business Profileலை உருவாக்கவும்: [பிராண்டு/நிறுவனம்]: [நிபுணரின் பெயர்].

ஏற்கத்தக்கது: "Allstate: ஜோ மைக்கேல்" (இந்த Allstate பிராண்டட் சேவை வழங்கும் இருப்பிடத்தில் ஜோ என்பவர் மட்டுமே மக்களுக்குச் சேவை வழங்கும் நிபுணராகப் பணியாற்றுகிறார் எனில்)

மார்க்கெட்டிங், விளம்பரங்கள், மற்ற போட்டிகள் போன்றவை

விளம்பரம், மார்க்கெட்டிங் செயல்பாடுகள், போட்டிகள், பிற சலுகைகள் போன்று எதுவாக இருந்தாலும் அவை அந்தச் செயல்பாட்டுக்கான விதிமுறைகளுடன் தெளிவாக இணைக்கப்பட்டு, தெளிவான வழிகாட்டுதல்களையும் தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும். நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்கும் அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

முக்கியம்: இந்த வழிகாட்டுதல்களை மீறும் தனிநபர்கள் அல்லது பிசினஸ்களுக்கு Googleளில் உள்ள Business Profileகளுக்கான அணுகலையோ பிற Google சேவைகளுக்கான அணுகலையோ இடைநீக்கம் செய்வதற்கான முழு அதிகாரமும் Googleளுக்கு உள்ளது. அத்துடன், அந்த மீறல்கள் சட்டவிரோதமானவையாக இருந்தால் சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து Google நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10381511163511604456
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false