அகற்றப்பட்ட வீடியோக்கள் மீண்டும் பதிவேற்றப்படாமல் தடுத்தல்

பதிப்புரிமை பெற்ற உங்கள் படைப்பு அனுமதியின்றி YouTubeல் வெளியிடப்பட்டிருந்தால் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கலாம். எங்கள் இணையப் படிவத்தைப் பயன்படுத்தி இதைச் செய்தால், அதே உள்ளடக்கத்தின் நகல்கள் மீண்டும் பதிவேற்றப்படாமல் தடுக்கும் விருப்பத்தைத் தேர்வுசெய்யலாம்.

இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்தால் நீங்கள் அகற்றக் கோரும் அதே உள்ளடக்கத்தின் நகல்கள் எதிர்காலத்தில் மீண்டும் பதிவேற்றப்படாமல் தானாகவே தடுக்க YouTube முயற்சிகளை மேற்கொள்ளும். எந்தவொரு வீடியோவும் அகற்றப்படுவதற்கு முன்பு அல்லது எந்தவொரு வீடியோவின் நகலும் மீண்டும் பதிவேற்றப்படாமல் தடுக்கப்படுவதற்கு முன்பு, உங்கள் அகற்றுதல் கோரிக்கை முழுமையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த அம்சத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் இதைப் பயன்படுத்தி அகற்றுதல் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியாமல் போகக்கூடும். இணையப் படிவத்தைத் தவறாகப் பயன்படுத்துவது (எ.கா. பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்தல்) உங்கள் கணக்கை இடைநீக்குவதற்கோ பிற சட்ட விளைவுகளுக்கோ வழிவகுக்கக்கூடும்.
நீங்கள் அகற்றிய வீடியோக்களை மீண்டும் பதிவேற்றுவதிலிருந்து எப்படித் தடுப்பது?

நகல்களைத் தடு எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தல்

நகல்களைத் தடு எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் முன், அகற்றுதல் கோரிக்கையில் நீங்கள் குறிப்பிடும் வீடியோக்களுக்கான பிரத்தியேக உலகளாவிய உரிமைகள் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நகல்களைத் தடு எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க:

  1. பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைக்கான இணையப் படிவத்தை நிரப்பத் தொடங்கவும்.
  2. அகற்றுதல் விருப்பங்கள் என்பதற்குக் கீழே "இந்த வீடியோக்களின் நகல்கள் YouTubeல் இனி காட்டப்படாதபடி தடு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
  3. படிவத்தை நிரப்பியவுடன் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பு: உங்கள் அகற்றுதல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பே எங்கள் சிஸ்டம் வீடியோவின் நகல்களைக் கண்டறிந்து பதிவேற்றப்படாமல் தடுக்கும்.
  • YouTube Studioவில் உள்ள பதிப்புரிமை பக்கத்தில் இருந்தும் இந்த இணையப் படிவத்திற்குச் செல்லலாம். அகற்றுதல் கோரிக்கைகள் பிரிவில் புதிய அகற்றுதல் கோரிக்கை என்பதைக் கிளிக் செய்யவும்.
  • சில சமயங்களில், நகல்களைத் தடு எனும் விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் பதிப்புரிமை மீறலுக்காக ஏற்கெனவே அகற்றப்பட்ட ஒரு வீடியோவில் இருக்கும் உள்ளடக்கத்தின் நகல் மீண்டும் பதிவேற்றப்படுவதை நாங்கள் தடுக்கக்கூடும்.

மீண்டும் பதிவேற்றப்படாமல் தடுக்கப்பட்டவற்றைப் பார்த்தல்

உங்கள் அகற்றுதல் கோரிக்கையில் நகல்களைத் தடு என்பதைத் தேர்ந்தெடுத்திருந்து, அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், எத்தனை நகல்கள் மீண்டும் பதிவேற்றப்படாமல் தானாகத் தடுக்கப்பட்டன என்பதை நீங்கள் பார்க்கலாம்:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பதிப்புரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அகற்றுதல் கோரிக்கைகள் பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு வரிசையைக் கிளிக் செய்யவும். அந்த வரிசை விரிவடைந்து, அகற்றுவதற்குக் கோரப்பட்ட வீடியோ பற்றிய விவரங்களைக் காட்டும்.
  5. தானாகத் தடுக்கப்பட்டவை நெடுவரிசையில், மீண்டும் பதிவேற்றப்படாமல் எத்தனை வீடியோக்கள் தானாகவே தடுக்கப்பட்டன எனும் எண்ணிக்கையைப் பார்க்கலாம்.
    • இந்த நெடுவரிசையின் நிலை செயலில் உள்ளது என்று இருந்தால், இந்த வீடியோக்களின் நகல்கள் மீண்டும் பதிவேற்றப்படாமல் தடுக்க YouTube தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது என்று பொருள்.
பொருந்தும் வீடியோக்களைக் கண்டறிதல் நெடுவரிசையில் காட்டப்படும் வீடியோக்களை மதிப்பாய்வு செய்வது பற்றி மேலும் அறிக.

நகல்களைத் தடு எனும் விருப்பத்தை முடக்குதல்

உங்கள் அகற்றுதல் கோரிக்கையில் நகல்களைத் தடு எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால், அந்த விருப்பத்தை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். இதை முடக்கினால், அகற்றப்பட்ட வீடியோக்களின் நகல்கள் எதிர்காலத்தில் பதிவேற்றப்படுவது அனுமதிக்கப்படும். இந்த விருப்பத்தை முடக்க:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பதிப்புரிமை  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அகற்றுதல் கோரிக்கைகள் பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு வரிசையைக் கிளிக் செய்யவும். அந்த வரிசை விரிவடைந்து, அகற்றுவதற்குக் கோரப்பட்ட வீடியோ பற்றிய விவரங்களைக் காட்டும்.
  5. நகல்களைத் தடு என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
குறிப்புகள்:
  • நகல்களைத் தடு அம்சத்தை முடக்கினால் அந்தத் தருணத்திலிருந்து பதிவேற்றப்படும் வீடியோக்களை மட்டுமே அது அனுமதிக்கும். ஏற்கெனவே அகற்றப்பட்ட வீடியோக்கள் மீட்டெடுக்கப்படாது.
  • உங்கள் அகற்றுதல் கோரிக்கையைத் திரும்பப் பெறுவதும் இந்த அம்சத்தைத் தானாகவே முடக்கும்.

பொதுவான கேள்விகள்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பித்தால்:

அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும்போது "நகல்களைத் தடு" என்பதைத் தேர்ந்தெடுக்க மறந்துவிட்டேன். திரும்பச் சென்று அதைத் தேர்வுசெய்ய முடியுமா?

நகல்களைத் தடு எனும் விருப்பத்தை நீங்கள் முதலிலேயே தேர்ந்தெடுக்கவில்லை எனில் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு அதைத் தேர்ந்தெடுக்க முடியாது. உங்கள் பதிப்புரிமையை மீறுகின்ற உள்ளடக்கத்தைக் கொண்ட மற்றொரு வீடியோவைக் கண்டறிந்தால், இணையப் படிவத்தைப் பயன்படுத்தி புதிய அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பியுங்கள். சமர்ப்பிக்கும் முன் நகல்களைத் தடு எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மீண்டும் பதிவேற்றப்படாமல் தானாகவே தடுக்கப்பட்ட வீடியோக்களை என்னால் ஏன் பார்க்க முடியவில்லை?

மீண்டும் பதிவேற்றப்படாமல் தானாகவே தடுக்கப்பட்ட உள்ளடக்கத்தின் நகல்களை இந்தக் காரணங்களால் உங்களால் பார்க்க முடியாமல் இருக்கலாம்:

  • உங்கள் அகற்றுதல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பது.
  • அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் நகல்கள் எதுவும் கண்டறியப்படாமல் இருப்பது.

"நகல்களைத் தடு" எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் எனது வீடியோவின் ஒரு நகல் தானாகவே அகற்றப்படாமல் உள்ளது. அது ஏன் கண்டறியப்படவில்லை?

நகல்களைத் தடு அம்சமானது அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் நகல்கள் மீண்டும் பதிவேற்றப்படாமல் தடுக்க முயல்கிறது. உங்களின் அகற்றுதல் கோரிக்கை ஏற்கப்பட்ட பிறகே இந்த அம்சம் செயல்படத் தொடங்கும். நீங்கள் பார்த்த வீடியோ, கோரிக்கை ஏற்கப்படுவதற்கு முன்பு பதிவேற்றப்பட்டிருப்பதற்கான சாத்தியம் உள்ளது.

உங்கள் உள்ளடக்கத்தின் சிறு வீடியோ கிளிப்புகள் பதிவேற்றப்படுவதிலிருந்து தடுக்கப்படாமல் இருக்கலாம். எங்கள் சிஸ்டம் இவற்றை அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் நகலாகக் கருதாமல் இருக்கக்கூடும்.

அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் நகலை நீங்கள் கண்டறிந்தால், அதை எங்கள் இணையப் படிவத்தைப் பயன்படுத்திப் புகாரளிக்கலாம். நீங்கள் பார்த்த வீடியோ பொருந்தும் வீடியோக்கள் பிரிவில் காட்டப்படுகிறதா எனப் பார்த்து, அங்கிருந்து அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

"தானாகத் தடுக்கப்பட்டவை" நெடுவரிசைக்கும் "பொருந்தும் வீடியோக்களைக் கண்டறிதல்" நெடுவரிசைக்கும் இடையேயான வித்தியாசம் என்ன?

அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் நகல்களின் எண்ணிக்கை தானாகத் தடுக்கப்பட்டவை நெடுவரிசையில் காட்டப்படும். பயனர் இந்த வீடியோக்களைப் பதிவேற்ற முயலும்போது, இவை YouTubeல் காட்டப்படுவதிலிருந்து தானாகவே தடுக்கப்படும்.

தானாகத் தடுக்கப்பட்டவை என்பதன் நிலை செயலில் உள்ளது என இருந்தால், இந்த நகல்களைப் பிறர் பதிவேற்றுவதை YouTube தடுக்க முயல்கிறது என்று அர்த்தம்.

அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் நகல்களாக இருக்கச் சாத்தியமுள்ளவற்றை YouTube தேடுகிறதா இல்லையா என்பதைப் பொருந்தும் வீடியோக்களைக் கண்டறிதல் நெடுவரிசை குறிக்கும்.

பொருந்தும் வீடியோக்களைக் கண்டறிதல் என்பதன் நிலை செயலில் உள்ளது என இருந்தால், அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் நகல்களாக இருக்கச் சாத்தியமுள்ளவற்றை YouTube தேடுகிறது என்று அர்த்தம். இந்த வீடியோக்கள் நகல்கள்தான் என உறுதியாகத் தெரியாமல், நகல்களாக இருக்கச் சாத்தியமுள்ளவை எனக் கண்டறியப்பட்டதாலேயே பதிவேற்றம் தானாகவே தடுக்கப்படவில்லை.

குறிப்பு: உங்கள் அகற்றுதல் கோரிக்கை செயலில் இல்லாதபோது இந்த நெடுவரிசைகளின் நிலை செயலில் இல்லை என்று காட்டப்படலாம். உங்கள் அகற்றுதல் கோரிக்கையைத் திரும்பப் பெற்றிருந்தாலோ எதிர் அறிவிப்பு காரணமாக ஒரு வீடியோ மீட்டெடுக்கப்பட்டு இருந்தாலோ இப்படி நிகழலாம்.

நகல்களாகக் கண்டறியப்படாத வீடியோக்கள் உட்பட, எனது உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும் அனைத்து வீடியோக்களும் பதிவேற்றப்படாமல் ஏன் தடுக்கப்படுவதில்லை?

சில நேரங்களில் உங்கள் பதிப்புரிமையை மீறாமலேயே உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் உள்ளடக்கம் பயன்படுத்தப்பட்டிருப்பது சரியானதே என்பதைக் குறிக்கும் பதிப்புரிமை விதிவிலக்குகள் உள்ளன (எ.கா. நியாயமான பயன்பாடு)

அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் நகல்களாக இருக்கச் சாத்தியமுள்ளவற்றை எங்கள் சிஸ்டம் காட்டும், ஆனால் அதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். நகலாக இருக்கச் சாத்தியமுள்ள ஒரு வீடியோ உங்கள் பதிப்புரிமையை மீறுவதாகக் கருதினால், அதற்கான அகற்றுதல் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.

பதிவேற்றப்படாமல் தானாகவே தடுக்கப்பட்ட தனி நகல்களை என்னால் ஏன் கண்டறிய முடியவில்லை?

அந்த வீடியோக்கள் பதிவேற்றப்படாத காரணத்தினால் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை. மீண்டும் பதிவேற்றப்படாமல் எத்தனை நகல்கள் தடுக்கப்பட்டன என்ற எண்ணிக்கையைத் தானாகத் தடுக்கப்பட்டவை நெடுவரிசையில் இருக்கும் வீடியோக்களின் எண்ணிக்கையில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் நகல் தனிப்பட்டதாக அமைக்கப்பட்டிருந்தால் அது பதிவேற்றப்படுவதில் இருந்து தடுக்கப்படுமா?

பார்வையாளர் அனுமதி அமைப்புகள் எதுவாக இருந்தாலும் அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் நகல்களை எங்கள் சிஸ்டங்கள் கண்டறிந்து, மீண்டும் பதிவேற்றப்படுவதில் இருந்து அவற்றைத் தடுக்க முயலும்.

உங்கள் மதிப்பாய்வு தேவைப்படும் பொருத்தங்களுக்கு, பொதுவில் கிடைக்கும் வீடியோக்களை மட்டுமே நாங்கள் காட்டுவோம்.

"நகல்களைத் தடு" அம்சம் வீடியோ அல்லாத என்னுடைய பதிப்புரிமை பெற்றுள்ள உள்ளடக்கத்தை (எ.கா. படம்) பயன்படுத்தும் வீடியோக்களையும் தானாகவே தடுக்குமா?

ஆம். பதிப்புரிமை பெற்ற உங்களின் வீடியோ அல்லாத உள்ளடக்கம் வீடியோவில் இருந்தால் நகல்களைத் தடு அம்சம் வீடியோக்கள் மீண்டும் பதிவேற்றப்படுவதைத் தடுக்கும். மேலும் அதன் நகல்களாக இருக்கச் சாத்தியமுள்ள வீடியோக்களைக் குறிப்பிடும்.

YouTubeல், பதிவேற்றப்படும் வீடியோக்களை மட்டுமே எங்கள் சிஸ்டங்கள் சரிபார்க்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வீடியோ அல்லாத உள்ளடக்கம் விளக்கத்திலோ சிறுபடத்திலோ அல்லது வீடியோவைத் தவிர வேறெங்கோ பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை எங்கள் சிஸ்டத்தால் கண்டறிய முடியாது.

நான் அகற்றக் கோரும் உள்ளடக்கத்திற்கான உலகளாவிய பிரத்தியேக உரிமைகளைக் கொண்டிருத்தல் என்றால் என்ன? 

உலகளாவிய பிரத்தியேக உரிமைகள் இருந்தால், உலகளவில் அந்த உள்ளடக்கத்தின் பயன்பாட்டையும் விநியோகத்தையும் நீங்களோ நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கிளையண்ட்டோ மட்டுமே கட்டுப்படுத்துவீர்கள்.

Content IDக்கான அணுகல் எனக்கு ஏன் கிடைக்கவில்லை?

அவ்வப்போது பதிவேற்றுபவர்கள் முதல் பிரபல மீடியா நிறுவனங்கள் வரையிலான பல்வேறு வகையான கிரியேட்டர்களுக்கு ஏற்ற வகையில் YouTubeன் பதிப்புரிமை நிர்வாகக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிக்கலான பதிப்புரிமை நிர்வாகத் தேவைகளைக் கொண்டுள்ள பதிப்புரிமையாளர்களுக்கு Content ID கிடைக்கும்.

Content IDக்குத் தகுதிபெற, YouTubeல் அடிக்கடி பதிவேற்றப்படும் சொந்த உள்ளடக்கத்தின் பெரும்பான்மையான பகுதியின் பிரத்தியேகமான உரிமை பதிப்புரிமையாளர்களிடம் இருக்க வேண்டும். பிற நிபந்தனைகளில் ஒன்றாக, அவர்களுக்குப் பதிப்புரிமை குறித்த நல்ல புரிதலும் Content IDயை நிர்வகிப்பதற்குத் தேவையான கருவிகளும் இருக்க வேண்டும். Content ID தகுதிநிலை குறித்து மேலும் அறிக.

நான் ஓர் இசைக்கலைஞன். எனது பாடல்கள் மீண்டும் பதிவேற்றப்படுவதிலிருந்து தடுக்க, இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாமா?

பயன்படுத்தலாம். இணையப் படிவத்தில் “அசல் பாடல்” வகையைப் பயன்படுத்தி வீடியோவை அகற்றியதும், அதே ஆடியோவின் நகல்கள் மீண்டும் பதிவேற்றப்படுவதை YouTube தடுக்க முயல்கிறது. 

கூடுதலாக, Copyright Match Tool உங்கள் பாடல் அல்லது ஆடியோ உள்ளடக்கத்துடன் பொருந்தும் சாத்தியமுள்ள ஆடியோவைக் கொண்டுள்ள வீடியோக்களை உங்களுக்குக் காட்டும். யாரேனும் உங்கள் பாடல் அல்லது ஆடியோவின் ஒரு பகுதியை அவரின் வீடியோவில் பயன்படுத்தினால் Copyright Match Tool அதை உங்களுக்குக் காட்டாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் வீடியோ பதிவேற்றப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டால்:

என்னுடைய வீடியோ பதிவேற்றப்படுவதிலிருந்து ஏன் தடுக்கப்பட்டது என்பது குறித்த கூடுதல் தகவல்களை நான் எங்கே அறிந்துகொள்ளலாம்?

கூடுதல் தகவல்களை YouTube Studioவில் காணலாம்:

  1. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. கட்டுப்பாடுகள் நெடுவரிசையில், விதிமுறைகளும் கொள்கைகளும் என்பதற்கு மேல் கர்சரைக் கொண்டுசெல்லவும். பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையின் காரணமாக முன்பே அகற்றப்பட்ட ஒரு வீடியோவில் உள்ள உள்ளடக்கத்தின் நகல் உங்கள் வீடியோவில் இடம்பெற்றிருப்பதால், அதைப் பதிவேற்ற முடியவில்லை என பாப்-அப் தெரிவிக்கும். பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை வழங்கியது யார், கோரிக்கை எப்போது பெறப்பட்டது, உரிமைகோருபவரின் பதிப்புரிமை பெற்ற படைப்பின் தலைப்பு ஆகியவை பாப்-அப்பில் காட்டப்படும்.

உங்கள் வீடியோ பதிவேற்றப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டால் அதுகுறித்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்புவோம். அதில் இந்தத் தகவல்கள் இருக்கும்.

என்னுடைய வீடியோக்களில் ஏதேனும் ஒன்று பதிவேற்றப்படாமல் தடுக்கப்பட்டால் நான் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறுவேனா?

இல்லை. ஒரு வீடியோ பதிவேற்றப்படுவதிலிருந்து தானாகவே தடுக்கப்பட்டால் அது சேனலைப் பாதிக்காது, மேலும் பதிப்புரிமை எதிர்ப்புகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்புகள் போன்றவற்றையும் பெறமாட்டீர்கள்.

எனது வீடியோ பதிவேற்றப்பட வேண்டும் என நான் நம்பினால் என்ன செய்யலாம்?

உங்கள் வீடியோ பதிவேற்றப்பட வேண்டும் என நீங்கள் நம்பினால், பாப்-அப்பில் காட்டப்படும் இணைப்பைப் பயன்படுத்தி மறுபரிசீலனை செய்யும்படிக் கேட்கலாம்.

உங்கள் மறுபரிசீலனைக் கோரிக்கையில் பின்வரும் தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும்:

  1. உங்கள் தொடர்புத் தகவல்கள்

உங்கள் மறுபரிசீலனைக் கோரிக்கையை YouTube ஏற்றதும் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்தவருக்கு அதை அனுப்புவோம் (உங்களின் தனிப்பட்ட தகவல்கள் உட்பட). உங்கள் மறுபரிசீலனைக் கோரிக்கை தொடர்பாக உங்களைத் தொடர்புகொள்ள இந்தத் தகவல்களை அவர் பயன்படுத்தக்கூடும். உரிமைகோருபவருடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது குறித்து உங்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால், உங்கள் சார்பாக மறுபரிசீலனைக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை (வழக்கறிஞர் போன்று) நீங்கள் நியமிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி தனது சொந்த YouTube கணக்கைப் பயன்படுத்தி கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், உங்களுடனான தனது உறவை அவர் குறிப்பிட வேண்டும்.

  1. பதிவேற்றப்படுவதிலிருந்து தடுக்கப்பட்ட வீடியோவின் சரியான URL

மறுபரிசீலனை செய்யும்படிக் கேட்க, பாப்-அப்பில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யும்போது இது தானாகவே தோன்றும்.

  1. வீடியோவைப் பதிவேற்றுவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் உங்களிடம் இருக்கிறது என நம்புவதற்கான காரணம்

உங்கள் சொந்த வார்த்தைகளில், வீடியோவைப் பதிவேற்றுவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் ஏன் உங்களிடம் உள்ளன என்பதை விளக்குங்கள், அதற்கு உறுதுணையாக இருக்கும் ஆவணங்களை இணையுங்கள். இது மதிப்பாய்விற்காக உரிமைகோருபவருக்கு அனுப்பப்படும்.

  1. உறுதிமொழிகள்

பின்வரும் 2 உறுதிமொழிகளையும் நீங்கள் ஏற்க வேண்டும்:

  • கேள்விக்குரிய உள்ளடக்கத்தை YouTubeல் பதிவேற்ற தேவையான அனைத்து உரிமைகளும் என்னிடம் உள்ளன என்று உறுதியளிக்கிறேன்.
  • இந்த மறுபரிசீலனைக் கோரிக்கையில் உள்ள தகவல்கள் உண்மையானவை என்பதையும் முழுமையானவை என்பதையும் உறுதிசெய்கிறேன். தவறான தகவல்களைக் கொண்டு மறுபரிசீலனைக் கோரிக்கையை நிரப்புவதால் எனது YouTube கணக்கு முடக்கப்படக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டேன்.
  1. உங்கள் கையொப்பம்

உங்கள் அல்லது உங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியின் (இருந்தால்) சட்டப்பூர்வமான முழுப் பெயரை டைப் செய்தால் அது டிஜிட்டல் கையொப்பமாகச் செயல்படும். சட்டப்பூர்வமான முழுப் பெயர் என்பதில் பெயரின் முற்பகுதியும் பிற்பகுதியும் இருக்க வேண்டும், நிறுவனத்தின் பெயராகவோ சேனலின் பெயராகவோ இருக்கக்கூடாது.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8817992048010087200
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false